Home » சிறப்புச் செய்திகள் » போர்க்குற்றம்: சார்ல்ஸ் டெய்லருக்கு 50-ஆண்டு சிறை

போர்க்குற்றம்: சார்ல்ஸ் டெய்லருக்கு 50-ஆண்டு சிறை

போர்க்குற்றம் சாட்டப்பட்ட லைபீரியாவின் முன்னாள் அதிபர் சார்ல்ஸ் டெய்லருக்கு 50 -ஆண்டு கால சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

ஐநா அனுசரணையுடன் த ஹேக் நகரில் அமைக்கப்பட்ட சியரா லியோனுக்கான சிறப்பு நீதிமன்றமே அவருக்கு இந்தத் தண்டனையை இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.

1991-2002 காலப்பகுதியில் நடந்த சிவில் யுத்தத்தின்போது சியரா லியோனில் இயங்கிய ஆயுதக்குழுவினருக்கு உதவிகளும் ஒத்துழைப்பும் வழங்கியதற்காக கடந்த மாதம் சார்ல்ஸ் டெய்லர் குற்றவாளியாகக் காணப்பட்டார்.

நீதிமன்றத்தில் வாதிட்ட வழக்குத் தொடுநர் தரப்பு வழக்குரைஞர்கள் டெய்லருக்கு 80 ஆண்டுகால சிறைத்தண்டனை அளிக்க வேண்டும் என்று வாதிட்டனர்.

ஆனால் அந்தத் தண்டனைக் காலம் மிக அதிகமானது என்று சார்ல்ஸ் டெய்லர் தரப்பு வழக்குரைஞர்கள் கூறியிருந்தார்கள்.

அவருக்கு எதிராக படுகொலைகள், பாலியல் வல்லுறவுகள், அடித்தனக் குற்றங்கள் என பல மோசமான போர்க்காலக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.

இன்று தண்டனையை அறிவித்த நீதிபதி, ‘சார்ல்ஸ் டெய்லர் புரிந்துள்ள குற்றங்கள் மனித வரலாற்றில் மிகக் கோரமானது, அவர் சியரா லியோனில் நடந்த சிவில் யுத்தத்தின்போது பல கொடூரங்களைப் புரிந்த ஆயுதக்குழுவினருக்கு எல்லா வகைகளிலும் உதவி புரிந்திருந்தார்’ என்று நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

சியரா லியோன் சிவில் யுத்தத்தின்போது, ஆயுததாரிகள் ஆட்களின் கைகால்களை வெட்டியுள்ளனர், கர்ப்பிணிப் பெண்களை வயிற்றைக் கீறி குழந்தைகள் ஆண்களா பெண்களா என்றும் பந்தயம்கட்டி அட்டூழியங்கள் நடத்தியதாகக் கூறப்படுகின்றது.
தான் செய்த குற்றங்களுக்காக சார்ல்ஸ் டெய்லர் வருத்தப்படவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
64 வயதான டெய்லர் தான் குற்றம் எதுவும் புரியவில்லை என்று கூறிவந்தார். தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் நாஜிக்களால் புரியப்பட்ட கொடூரங்கள் பற்றிய நியுரம்பர்க் வழக்கு விசாரணைகளுக்குப் பின்னர், சர்வதேச நீதிமன்றமொன்றால் போர்க்குற்றங்களுக்காக முன்னாள் அரச தலைவர் ஒருவர் தண்டனை பெறுவது இதுதான் முதல் சந்தர்ப்பம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

comment closed