காணி பொலிஸ் அதிகாரங்களுடன் கூடியதாக நாட்டிலுள்ள சகல இன மக்களையும் பாரபட்சமின்றி நடத்தக் கூடிய அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும். இவ்வாறான அரசியல் தீர்வை அரசு முன்னெடுக்கப் பின்னடிக்கின்றமை தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை நேற்று தம்மைச் சந்தித்த பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் வார்ட்டனிடம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.போரின் பின்னர் குடாநாட்டின் தற்போதைய நிலைமை , தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்பு, அரசு முன்னெடுக்கும் அபிவிருத்தி, திட்டங்கள், மீளக்குடியமர்வு நடவடிக்கைகள் தொடர்பாக பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஆயர் விளக்கிக் கூறினார். குறிப்பாக போரின் பின்னர் வடக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் இடம்பெற்று வருகிற போதும் தமிழ் மக்கள் மத்தியில் சந்தோஷம் இல்லை.
தமிழ் மக்கள் என்ன நோக்கத்திற்காக விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தார்களோ அந்த நோக்கத்தை அரசு இன்னும் நிறைவேற்றி வைக்கவில்லை. இதுவே தமிழ் மக்களின் நெஞ்சங்களில் மகிழ்ச்சி இன்மைக்கான காரணமாகும்.
நாட்டிலுள்ள சகல இன மக்களும் பாரபட்சமின்றி நடத்தப்பட வேண்டும். அத்துடன் வடக்கு, கிழக்கு காணி, பொலிஸ் அதிகா ரங்களுடன் கூடிய அரசியல் தீர்வை அரசு முன்வைப்பது முக்கியமானது. அரசியல் தீர்வுக்காகத் தமிழத் தேசிய கூட்டமைப்பு, அரசுடன் தொடர்ந்து பேசும் எனக் கூறிகிறது. அது வரவேற்கக் கூடியது. மிகச் சந் தோஷமான விடய மும் கூட. இவ்வாறு பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினரிடம் யாழ் ஆயர் விபரித்து தெளிவுபடுத்தினார்.
இராணுவக் குறைப்பு மிகவும் அவசியமானது என்பதையும் தற்போது தமிழர் பகுதிகள் இராணுவ மயமாக இருக்கிறது என்பதையும் யாழ் ஆயர் சுட்டிக்காட்டினார்.இந்தச் சந்திப்பின் போது பிரிட்டனுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் டாக்டர் கிறஸ் நோனிஸ் இலங்கை வெளிவிவகார அமைச்சின் அரசியல்பிரிவுக்கான அதிகாரி மக்ஸ்வெல்கீஜவ், யாழ் அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் ஆகியோரும் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினருடன் வருகை தந்திருந்தனர்.
பல தரப்பு மக்களுடனும்சந்தித்து கலந்துரையாடல்
யாழ்ப்பாண மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சமகால பிரச்சினைகள் தொடர்பில் மக்களிடமே பிரிட்டன் நாடாளுமன்றக் குழுவினர் நேரடியாகக் கேட்டுத் தெரிந்து கொண்டனர். இரண்டு நாள் பயணமாக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் வார்ட்டனிடம் நேற்றைய தினம் காலை 8 மணி முதல் 10 மணி வரையில் யாழ். நகரின் முக்கியமான இடங்களைப் பார்வையிட்டார்.
இதன்போது யாழ்.மத்திய பஸ் நிலையம், அருகிலிருந்த புத்தகசாலைக்கு வந்த குழுவினர் நகரின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த பொதுமக்களுடன் கலந்துரையாடினார். இதன்போது இளைஞர்களிடம், வெளிநாட்டுக்குச் செல்லும் ஆசை இருக்கிறதா என நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டபோது, இங்கு வேலைவாய்ப்புக் கிடைத்தால் வெளிநாட்டுக்குச் செல்லமாட்டோம் எனப் பதிலளித்தனர்.


comment closed