Home » முக்கிய செய்திகள் » எதிர்காலத்தை தீர்மானிக்கின்றவர்களாக நாங்கள் இருக்க வேண்டும்-நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.

எதிர்காலத்தை தீர்மானிக்கின்றவர்களாக நாங்கள் இருக்க வேண்டும்-நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.

தமிழினம் இந்த மண்ணிலே விடுதலை பெற்று எங்களுடைய நிலத்தை நாங்களே ஆளும் காலம் விரைவில் வரும். அதுவரை இழப்புகளை நாங்கள் மறந்துபோகக் கூடாது. இழப்புகளை அத்திவாரமாகக் கொண்டு தமிழ் இனத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பவர்களாக நாங்கள் திடசங்கற்பம் பூண வேண்டும்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜா தெரிவித்தார்.
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது உயிரிழந்தவர்களின் 38 ஆவது ஆண்டு நினைவுதினம் அவர்களின் நினைவுத் தூபி அமைந்துள்ள இடத்தில் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
அன்று கொல்லப்பட்ட இந்த உயிர்கள் தமிழினத்தை எழுச்சி பெற வைத்தது. எங்கள் இனத்தின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கு இந்தத் தியாகிகளின் உயிர்கள் பலியாக்கப்பட்டமையும் ஒரு அடிப்படையாக அமைந்தது.
தமிழ் மக்களின் சார்பில் பலி கொள்ளப்பட்ட இந்த 10 உயிர்களுக்கும் இன்று அஞ்சலி செலுத்துவதற்கு மாத்திரம் நிகழ்வல்ல. தமிழ் மக்கள் இருக்கும் வரை இந்த மறவர்களை மறந்து போகாமல் நினைவு கூருவார்கள்.
இந்தத் தியாகிகள் கொல்லப்பட்டமை தொடர்பில் நேர்மையான விசாரணைகள் இடம்பெறவில்லை. அதற்குப் பதிலாக இவர்களின் கொலைக்குக் காரணமாக இருந்த சந்திரசேகர் என்ற பொலிஸ் அதிகாரிக்குப் பதவி உயர்வே வழக்கப்பட்டது.
தமிழ் மக்கள் தமது பாரம்பரிய, பண்பாட்டு நிகழ்வுகளைக் கொண்டாடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்ற எண்ணமும்  செயற்பாடும் அரசின் நிகழ்ச்சி நிரலில் இன்று மட்டுமல்ல ஆரம்ப காலம் தொட்டே இருந்திருக்கிறது.
சிங்கள, பௌத்த வல்லாதிக்கம் நாடு முழுவதையும் ஒரே இனமே ஆள வேண்டும், அதனையும் பெரும்பான்மை சிங்களவர்களே ஆள வேண்டும் என்ற அதிகார வெறியோடு தமிழ் மக்கள் நடத்தப்படுகின்றனர். இதனால்தான் இந்த இடத்தில் அன்று எங்கள் மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அதுதான் இன்றும் நடைபெறுகிறது.
இதனைத் தமிழ் மக்களாகிய நாங்கள் மனதிலே இருத்தி, எங்களுடைய இனம் இந்த மண்ணிலே விடுதலை பெற்று, தங்களுடைய நிலத்தைத் தாங்களே ஆளுகின்ற வரையில் இழப்புகளையும், அனுபவித்த துன்பங்களையும் மறந்துவிடாமல் இருக்க வேண்டும்.
இழப்புகளை அத்திவாரமாக எடுத்து தமிழ் மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்றவர்களாக நாங்கள் இருக்க வேண்டும் என்று திடசங்கற்பம் பூணுவோம்  என்றார்.
இந்த நிகழ்வில் புளோட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், யாழ்.நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம், தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களுள் ஒருவரான வாழ்நாள் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

comment closed