“ஆச்சர்யங்களும் நிறைந்த கற்பனைத் தேவதைகளின் கதை இல்லை. எல்லாச் சாத்தான்களாலும் சபிக்கப்பட்டிருக்கும் ஒரு யதார்த்த தேவதையின் கதை.”
ஒரு உண்மை நிகழ்வை – ஈழத் தமிழினத்தின் ஆன்மாவில் ஆழமாகப் படிந்த ஒரு வடுவை, திரைக்காவியமாக்கியுள்ளார் இயக்குநர் புகழேந்தி தங்கராஜ்.
ஈழப்போரில் தமிழ்ப் பெண்களுக்கும், இளம் சிறுமிகளுக்கும் எதிராக சிங்கள ராணுவம் கட்டவிழ்த்துவிட்ட வன்முறை கொஞ்சமல்ல. பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் இந்தக் கொடுமையைத் தாங்க முடியாமல் இறந்த சோகங்கள் சொல்லி முடியாதவை.அத்தகைய சோகக் கதைகளில் ஒன்றுதான் “உச்சிதனை முகர்ந்தால்” என்ற தலைப்பில் படமாக வருகிறது. தமிழ் உணர்வாளரும் காற்றுக்கென்ன வேலி போன்ற மாற்று சினிமா படைப்பாளியுமான புகழேந்தி தங்கராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
தமிழீழத்தில் சிங்கள ராணுவத்தால் சூறையாடப்பட்ட 13 வயது தமிழ்ச் சிறுமியின் கதைதான் இந்தப் படம். நீனிகா என்ற சிறுமி இந்த வேடத்தில் நடித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்திற்குள் புகுந்த சிங்கள இனவெறி இராணுவம் நடத்திய கொடூரமான காம வெறியாட்டத்தில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட 13 வயது சிறுமி, தான் கர்ப்பமுற்றிருப்பதை அறியாமலேயே – தமிழ்நாட்டிற்கு தன் தாயுடன் வந்து தஞ்சமடைகிறாள். அவளையும் அவளது தாயாரையும் மானுட உணர்வுள்ள ஒரு பேராசிரியர்(சத்யராஜ்) தனது குடும்பத்தின் ஒரு அங்கமாக வைத்து பாதுகாக்கிறார்.
இந்தப் பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்துக் காத்த தம்பதியர்களாக சத்தியராஜும் சங்கீதாவும் நடித்துள்ளனர். சீமான், நாசர், லட்சுமி ராமகிருஷ்ணன் என தேர்ந்தெடுத்த நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களைச் செய்துள்ளனர்.
ஈழத்தின் துயரங்களுக்கு இந்தியாவும் ஒரு காரணம் என்பது படத்தில் மறைபொருளாக சுட்டிக்காட்டப்பட்டிருப்பதால், ஏகப்பட்ட பிரச்சினைகள்.
வயிற்றில் வளரும் குழந்தையுடன் வலம் வரும் சிறுமியின் தந்தை, ராணுவத்தால் கொல்லப்பட, அதை மகளிடம் சொல்லாமல் இலங்கைக்கு செல்கிறார் தாய். சத்யராஜும், சங்கீதாவும் சிறுமியை காக்கின்றனர். இந்நிலையில், சங்கீதாவும் நீண்ட காலத்திற்குப் பிறகு கர்ப்பமாகிறார். அவரைப் பார்க்க வரும் அம்மா, சிறுமியின் கர்ப்பத்தைக் கண்டு அதிர்ந்து, சத்தம் போடுகிறார். தன்னால்தானே பிரச்சினை என்று வருந்தும் சிறுமி, யாரிடமும் சொல்லாமல், வெளியேறுகிறார். அவளை திருநங்கை ஒருவர் காப்பாற்றுகிறார். பிறகு அந்தச் சிறுமிக்கு எய்ட்ஸ் நோய் பரவியிருப்பது தெரிகிறது. சிங்களவன் கற்பழித்து குழந்தையை மட்டுமல்ல, உயிரைக் கொல்லும் நோயையும் கொடுத்துள்ளான் என்று தெரியவர, முடிவு என்ன என்பது மனதை உருக்கும் இறுதிக்காட்சி.
அதிர வைக்கும் பரிதாபத்துக்குரிய சிறுமி வேடத்தில் வரும் நீநிகா, படத்தின் நாயகி. வெடிச்சத்தம் கேட்டும், விமானம் பறப்பதைப் பார்த்தும், தன்மீது குண்டு வீசுகிறார்கள் என்று நினைத்து பயப்படும்போது, கரைய வைக்கிறார். பிஞ்சு வயிற்றில் கர்ப்பத்தைச் சுமந்துகொண்டு, வீட்டிலுள்ள செல்லப்பிராணிக்கு பெயரிட்டு கொஞ்சுவதாகட்டும், தோட்டத்துக்கு நீர்ப்பாய்ச்சி ரோஜாக்களை வளர்ப்பதாகட்டும், புறாக்களுக்கு தீனி போடுவதாகட்டும் ஒவ்வொரு காட்சியிலும் பரிதாபத்தை அள்ளுகிறார்.
அவரது இலங்கைத்தமிழ்ப் பேச்சு, இனிக்கிறது. இந்தியாவுக்கு பாஸ்போர்ட், விசா இல்லாமல் தேடி வந்த சிறுமிக்கும், அவளது தாயாருக்கும் அடைக்கலம் கொடுக்கும் தம்பதியராக சத்யராஜ், சங்கீதா மனதில் நிற்கின்றனர். நீநிகாவின் கர்ப்பம் தெரிந்ததும் தானே அவளுக்கு இன்னொரு தாயாக மாறும் சங்கீதாவின் நடிப்பு யதார்த்தம்.
போலீசாக வரும் சீமான், டாக்டர்களாக வரும் நாசர், லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் ஆட்டோ டிரைவர் அருள்மணி மனதில் பதிகிறார்கள். பி.கண்ணன், அழகிய மணவாளனின் ஒளிப்பதிவு கைகொடுத்துள்ளது. இமான் இசையில் ‘உச்சிதனை முகர்ந்தால்’ பாடல் இனிய மெலடி. தமிழருவி மணியனின் வசனங்களில் அனல் பறக்கிறது.
இதையெல்லாம் விட மிக முக்கியம், இந்தப் படத்துக்கு வணிக சினிமாவில் முன்னணியில் உள்ள ஜெமினி பிலிம் சர்க்யூட் ஆதரவளித்திருப்பது. படத்தை தங்கள் பேனரிலேயே ஜெமினி நிறுவனம் விநியோகிக்கிறது.
தன் இனத்துக்கு நேர்ந்து கொடுமைகளை திரும்ப நினைத்துப் பார்ப்பது, அந்த சோகத்தை நினைத்து கண்ணீர் விட மட்டுமல்ல, இனவிடுதலையின் அடுத்த நகர்வு குறித்த விழிப்புணர்வையும் கோபத்தையும் நீர்த்துப் போகாமல் இருக்கச் செய்யவுமே. அந்த வகையில் உச்சிதனை முகர்ந்தால் தமிழர் வாழ்வில் முக்கிய சினிமாவாக அமையும் என்கின்றனர் தமிழ் உணர்வாளர்கள்!
உச்சிதனை முகர்ந்தால் – கசங்கிய மலரின் வாசம்!
நீநிகா, சத்யராஜ், சீமான், நாசர், சங்கீதா, லட்சுமி ராமகிருஷ்ணன், அருள்மணி
இயக்கம் : புகழேந்தி தங்கராஜ்
இசை : டி.இமான்
தயாரிப்பு : குளோபல் மீடியா


comment closed