Home » முக்கிய செய்திகள் » இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றிரவு 8 மணி முதல் 8.45 வரை இடம்பெற்றது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றிரவு 8 மணி முதல் 8.45 வரை இடம்பெற்றது.

அரசு  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடையிலான பேச்சுக்களை ஆரம்பிக்க இந்தியாதான் காரணகர்த்தாவாக இருந்தது. ஆகவே பேச்சு  சரியான தடத்தில் போகவேண்டுமாயின் இந்தியா தனது காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டும். இலங்கை அரசு உணரக்கூடிய வகையில் இந்தியாவின் அழுத்தம் இருந்தால்தான் கொழும்பு ஆட்சியாளர்கள்  தீர்வு ஒன்றை காண இணங்கி வருவார்கள். இல்லாவிடின் இந்தப் பேச்சால் எதுவித பயனும் இல்லை.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு எடுத்துச் சொல்லப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றிரவு 8 மணி முதல் 8.45 வரை இடம்பெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை.சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன், பொன்.செல்வராசா, செல்வம் அடைக் கலநாதன் ஆகியோர் பங்குபற்றினர். இந்தியத் தரப்பில் வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக்.கே.காந்தா மற்றும் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்தக் கலந்துரையாடலில் இந்தியாவுக்கு கூட்டமைப்பு தெரிவித்தவை வருமாறு:
எமக்கும் அரசுக்கும் இடையில் ஒரு வருட காலமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கும் பேச்சுவார்த்தை ஒரு அங்குலமும் நகரவில்லை. இலங்கை ஜனாதிபதியும், வெளிவிவகார அமைச்சரும் இந்திய அரசுக்கு பல உறுதி மொழிகள் வழங்கியபோதும் அவை எதுவும் காப்பாற்றப்படவில்லை. 13 ஆவது திருத்தத்தை தாண்டி அதிகாரங்கள் பகிரப்படலாம் என்று தெரிவித்தவர்கள் இப்போது, 13 ஆவது திருத்தத்தை விட குறைவான அதிகாரங்களைக்கூட பகிர தயாராக இல்லை.
13 ஆவது திருத்தத்தையும் தாண்டிய அதிகாரத்தையும் தமிழர்களுக்கு பகிர்வதாக உங்களுக்கு, இலங்கை ஐனாதிபதியும், வெளிவிவகார அமைச்\ரும் தந்த உறுதி மொழிகள் எவையும் காப்பாற்றப்படவில்லை. மாறாக 13ஆவது திருத்தத்தைவிட குறைந்த அதிகாரத்தை பகிர்வதற்குக் கூட தயாராக அவர்கள் இல்லைஎனவே பேச்சு இப்படியே போக முடியாது. தமிழ் மக்கள் இந்தப் பேச்சு தொடர்பில் எங்களிடம் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர். தமிழ் மக்களுக்கு நம்பிக்கையீனம் ஏற்பட்டால் இந்தப் பேச்சைத் தொடர்ந்து நடத்த முடியாது.
பேச்சு தொடர்பான சிக்கல் தீராவிடின் தமிழ் மக்களுக்கான பிரச்சினையும் தீராது. இந்தியாவினது பிரச்சினையும் தீராது. ஆகவே தமிழ் மக்களின் நலன் கருதி இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்தியா காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டும். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, இலங்கை அரசை பொறுப்புக் கூறும் கடமையிலிருந்து பாதுகாத்திருக்கின்றது. இறுதிக் கட்ட போரில் பல்லாயிரக்கணக்காண பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணைக்கு அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
வெளிப்படையானதும் சர்வதேச சமூகம் அங்கீகரிக்கக் கூடியதுமான விசாரணை ஒன்று உருவாக்கப்படவேண்டும். உண்மைகள் கண்டறியப்பட்டால் மாத்திரமே இனங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஏற்படும். அதன் மூலமே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். இந்த விடயங்களை இந்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஜனாதிபதியும் சரி மற்றும் அமைச்சர்களும் சரி “வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற முடியாது. மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது” என்று நாடாளுமன்றத்துக்குள்ளேயும் வெளியேயும் கூறிவருகின்றனர். இவ்வாறான அதிகாரங்கள் இல்லாமல் எவ்வாறு மாகாண சபையை நடத்துவது ?
இந்தியாவில் மாகாணங்களுக்கு இதனைவிட அதிகளவான அதிகாரங்களை வழங்கியுள்ளீர்கள். ஆனால் அதனைவிட குறைவான அதிகாரங்களைக் கேட்டால்கூட தரமுடியாது என்கிறார்கள்.
மேலும் நீங்கள் முன்னர் பயணம் செய்தபோது இருந்த கள நிலைமைகள்தான் இப்போதும் வடக்கில் இருக்கின்றன. இராணுவ ஆக்கிரமிப்பு, சிங்கள குடியேற்றம், உயர்பாதுகாப்பு வலயம், தமிழ் மக்கள் இன்னும் தமது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படாமை போன்றவை தொடர்கின்றன இவ்வாறு இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தாம் பிரச்சினைகளை முன்வைத்தார்கள் என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.இந்த விடயங்கள் தொடர்பாக தான் இலங்கை அரசுடன் கலந்துரையாடுவார் எனக் கிருஷ்ணா தெரிவித்தார் எனவும் அவர் மேலும் கூறினார்.

comment closed