Home » ஆய்வு, முக்கிய செய்திகள் » விலை போகுமா மாவீரர் தியாகம்

விலை போகுமா மாவீரர் தியாகம்

தாயாக விடுதலைக்காக மகத்தான தியாகங்களைப் புரிந்து ஈழப் போரிலே தம்முயிர்களை ஈந்த காவிய நாயகர்களை நினைவு கூருகின்ற உன்னதமான நாள்.
தேசியத் தலைவரின் சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுத்து வித்தாகிய மாவீரச் செல்வங்களை வணங்கி, அவர்களது கனவுகளை நெஞ்சிலே சுமந்து விடுதலையை வென்றெடுப்பதும் ஒவ்வொரு தமிழனின் மறுக்க முடியாத கடமையாகும்.
கார்த்திகை என்றாலே ஈழ தேசமெங்கும் புதிது புதிதாக கொட்டகைகள், அரங்குகள், என தோற்றம் பெற்று தமிழீழ தேசமே விழாக் கோலம் பூண்டது போலத் தோற்றமளிக்கத் தொடங்கிவிடும்.
மக்கள் மனதிலே வீரச் செல்வங்களின் நினைவுகளும், சிங்களப் படைகளிடையே இந்த மாவீரர் தினத்திலே எங்காவது பாரிய தாக்குதல் நடை பெறுமோ என்ற அச்ச உணர்வும், போராளிகள் மனதிலே தமிழர் வரலாற்றிலே பதிக்கப்பட வேண்டிய தினமாக மாற்றியமைக்க தக்கதான ஒரு வெற்றிப் பரிசை மாவீரர்களுக்கும் தலைவனுக்கும் மக்களுக்கும் கொடுத்தாக வேண்டும் என்ற உறுதியான உணர்வும் துளிர்விடத் தொடங்கிவிடும்.
தாயக விடுதலை நோக்கிய ஒவ்வொரு நகர்வையும் தூண்டி விடுகின்ற கணப்பொழுதுகளாகவும், அந்த வித்துக்களை பெற்றெடுத்த பெற்றோர் மற்றும் சகோதரர்கள் உறவினர்கள் என அனைவர் மனதிலும் அந்த கல்லறை தெய்வங்களின் நினைவுகள் நீங்காத கவலைகளாகவும் அவர்களின் கனவுகள் நனவாகும் நாள் வராதா என்ற ஏக்கங்களும் பிறக்கத்தொடங்கி விடும்.
இவ்வாறாக தமிழர் வரலாற்றிலே வடிக்கப்பட வேண்டிய நாளாகவும், தெய்வப் பிறவிகளாக இருந்து எமைக் காக்கும் அந்த உத்தம புருஷர்களைப் போற்றிப் பாட வேண்டிய தினமாகவும் அமைகின்றது.
இரத்த வெறி பிடித்த இனவாத அரசிடமிருந்தும் அதனுடன் இணைந்து கொண்ட சர்வதேச அரசுகளிடமிருந்தும் தமிழ் மக்களை காப்பதற்காக 2009 ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டத்தில் இருந்து அரசியற் போராட்டமாக மாற்று வடிவமெடுத்தது.
இதை ஒரு பாரிய இழப்பாகவும் விடுதலைப் போராட்டம் அழிந்து விட்டது எனவும் ஒரு சில சக்திகள் தீர்மானித்துக் கொண்டதன் விளைவே இன்றைய தமிழீழ போராட்டம் பற்றிய குழப்பங்களுக்கும், தெளிவின்மைகளுக்கும் புதிது புதிதாக தோற்றம் பெறுகின்ற அமைப்புக்களும், புல்லுருவிகளின் தோற்றத்திற்கும் காரணமாக அமைகின்றது.
தமிழீழ தேசியத் தலைமை, விடுதலைப் போராட்டம் வடிவம் மாறுகின்றதே அன்றி எமது இலக்கான சுதந்திர தமிழீழம் நோக்கிய பயணம் தொடரும் என்றும் அதற்கான காரணத்தினையும் தெளிவாக விளக்கியது. அத்துடன்  போராட்டம் புலம்பெயர் மக்களிடேயே ஒப்படைக்கப்படுகின்றது எனவும், அது வழி மாறாது புலம் பெயர் தமிழர்களால் விடுதலையினை வென்றெடுக்கும் வரை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் கூறியது, ஒரு சிலருக்கு சந்தோசமாகவும் சாதகமாகவும் அமைந்திருக்கின்றது போல் தெரிகின்றது.
தமிழீழ போராட்ட வரலாற்றிலே போராட்ட முறைகள் தேவைகளுக் கேற்றவாறு மாற்றியமைக்கப்படுவதும், அதை முன்னெடுப்பவர்கள் மாற்றம் பெறுவதும் சாதாரண விடயமே. இதையே தேசியத் தலைவரும். “போராட்ட வழிகள் மாறலாம் ஆனால் இலக்கு மாறது” என்றுதெளிவாக கூறியுள்ளார். பொறுப்பாளர்கள் எனவும் தளபதிகள் எனவும் பல்வேறு கட்டமைப்புகளுக் கேற்றவாறு அவர்களை நியமித்து அவர்களிடேயே பொறுப்புக்கள் கொடுக்கப்பட்டாலும் அவர்கள் உரிய முறையிலே செயற்ப்படாதவிடத்து அவர்களிடமிருந்து இன்னுமொருவருக்கு அந்தப் பொறுப்பு வழங்கப்படுவதும் இயல்பே.
இவ்வாறே தமிழீழப் போராட்டம் புலம் பெயர் தமிழர்களாகிய அனைவரிடமும் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. இந்த அரிய சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி எமது வீரர்களின் கனவினை நனவாக்க வேண்டிய கடமையினை உணர்ந்து சரிவர செய்ய முன்வர வேண்டும்.
புலத்திலே இன்று நடக்கின்ற தமிழீழ விடுதலைக்கு எதிரான செயற்பாடுகளை பார்க்கும் போது தமிழர் சமூகம் தலைமை கொடுத்த கடமையினை சரிவர செய்வதை விடுத்து தங்கள் சுய இலாபத்திற்காக போராட்ட இலக்கில் இருந்து விலகி வழிமாறிப் போய் விடுமோ என்கின்ற அச்சமும் ஆத்திரமும் ஏற்படுகின்றது.
அத்துடன் விடுதலைக்காக புலத்திலே உழைப்பவர்கள் தாக்கப்படுவதும், தமிழீழ விடுதலை நிகழ்வுகளை பிரித்து நடத்த எத்தனிப்பதும் கருணாவையும் கே.பி.யையும் துரோகிகளாக கூறிக் கொண்டு இன்று புலத்திலே எந்தனையோ கருணாக்களும், கே.பி.களும் உருவாகி விட்டார்களோ என்றே எண்ணத் தோன்றுகின்றது.
சொல்லிலே வர்ணிக்க முடியாத மாவீரர்களின் தியாகங்களை சற்றேனும் மனந் திறந்து பார்க்காது அவர்களை வணங்கித் துதிக்கின்ற நாட்களையே இன்று பல்வேறாக பிரித்து நடத்த முனைவது அந்த மாவீரர்களின் தியாகங்களை விலை பேசத் தொடங்கி விட்டார்களோ என்றே கருத வேண்டி உள்ளது.
இவ்வாறாக புலத்திலே பல்வேறு பிரிவுகளாக நடத்துவதை எந்தவொரு மாவீரர்களைப் பெற்றவர்கள், சகோதரர்கள் அல்லது உறவினர்கள், நண்பர்கள், தமிழர்கள் யாராயினும்  எச் சந்தர்ப்பத்திலும் இவ்வாறான நிகழ்வுகளையும் அதை நடத்துகின்றோம் என்று கூறி மாவீரர்களின் தியாகங்களை விற்பதற்கும்,  அவ்வாறு நடத்த முன்வருவோர்களையும் ஏற்றுக் கொள்ளவோ அனுமதிக்கவோ கூடாது.
மாவீரர்கள் ஒரே கொள்கையுடன் விதையானவர்கள். ஒரே தலைவன் வழியிலே அணிவகுத்து நின்றவர்கள். அவர்கள் கனவு ஒன்றே. தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்டதும் ஒரே மாவீரர் தினமே.
எனவே ஒன்றாக ஒற்றுமையாக ஒரே ஒரு மாவீரர் தினத்தை அனுமதிப்போம். நெஞ்சிலே இதய சுத்தியுடன் அவர்களை வணங்குவோம்.
றொபேட்
விழி மூடி உறங்கும் தோழர்களே!
உங்கள் வழிகள் எங்கள் விழிகளிலே
உங்கள் கனவுகள் எங்கள் நெஞ்சினிலே
நீங்கள் சுமந்த இலக்கினை நாமும் சுமப்போம்
விதையான குழிகளிலே ஈழத் தூண்கள் அமைப்போம்.

comment closed