Home » கல்வி » கிளிநொச்சியில் நடைபெறவிருந்த; கல்விப் பணிப்பாளருக்கான பிரிவுபசாரம் தடுத்து நிறுத்தம்

கிளிநொச்சியில் நடைபெறவிருந்த; கல்விப் பணிப்பாளருக்கான பிரிவுபசாரம் தடுத்து நிறுத்தம்

கிளிநொச்சி வலய முன்னாள் கல்விப் பணிப்பாளர் தம்பிராசா குருகுலராஜாவுக்கு சேவை நயப்பு விழாவும், பிரிவுபசார விழாவும் நேற்று நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியான நிலையில் மேலிடத்து உத்தரவு ஒன்றின் பேரில் அந்த நிகழ்வு நிறுத்தப்பட்டதாகத் தெரியவருகிறது.

நேற்று நடைபெறவிருந்த முன்னாள் கல்விப் பணிப்பாளருக்கான பிரிவுபசார விழாவை கிளிநொச்சி வலய ஆசிரியர்கள், அதிபர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நேற்று முற்பகல் 10 மணிக்கு இந்த விழாவை நடத்த ஏற்பாடுகள் பூர்த்தியாகியிருந்தன. இந்த நிலையில் சிலரின் அத்துமீறல் காரணமாக இந்த விழா தடுத்து நிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை கிளிநொச்சியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அலுவலகத்துக்கு கிளிநொச்சி வலயத்துக்குட்பட்ட பாடசாலை அதிபர்கள் நேற்று அழைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களிடம் எதிர்காலத்தில் எந்தவிதமான விழாக்களாக இருந்தாலும் சரி தமக்கு அறிவிக்கப்படவேண்டும். விழாக்களுக்கு அழைக்கப்படும் விருந்தினர்கள் பற்றிய விவரங்கள் எமக்குத் தெரியப்படுத்தல் வேண்டும் என்று எச்சரிக்கைத் தொனியில் தெரிவிக்கப்பட்டதாக அறிய வந்தது.
பாடசாலைகளை நடத்துவதற்கு கல்வி வலயங்கள் அதற்கு மேல் கல்வித் திணைக்களங்கள் இருக்கும் நிலையில் கட்சிக்காரர்கள் தலையிடவேண்டிய அவசியம் ஏதுமில்லை.
அவர்கள் இந்த விடயங்களில் தலையிடக்கூடாது தலையிடுவது கண்டிக்கத்தக்கது என்று கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
விழா தடுத்து நிறுத்தப்பட்டமை தொடர்பாக கிளிநொச்சி கல்வி வலய கல்விப் பணிப்பாளர் எஸ். முருகவேளுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது
முன்னாள் பணிப்பாளர் குருகுலராஜா வெளிநாடொன்றுக்குச் செல்ல வேண்டியிருந்ததாலும் நேற்று வெளியிடவிருந்த அவர் பற்றிய புத்தகத்தின் பதிப்புப் பணிகள் நிறைவு பெறாததாலும் நேற்று இந்த விழாவை நடத்த முடியாத நிலை ஏற்பட்டு விட்டது என்றும் இந்த விழா பின்னர் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
இதனிடையே பல வருடங்கள் கல்விப் பணியில் இருந்து கல்வி வளர்ச்சிக்கு பேருதவியாக அங்குள்ள ஆசிரியர்களுக்கு வழிகாட்டியாக விளங்கிய குருகுலராஜாவுக்கு பாராட்டு விழா நடத்துவதை தடுத்து நிறுத்தியது அதிபர்களையும் ஆசிரியர்களையும் மிகவும் மன வருத்தத்துக்கு உள்ளாக்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

comment closed