யாழ். பல்கலைக்கழக நடவடிக்கைகளை எவரும் குழப்புவதற்கு இடமளிக்க மாட்டோம் என்று இராணுவத்தின் யாழ். மாவட்டக் கட்டளைத்தளபதி உறுதி அளித்து சிலமணி நேரத்தில் மற்றுமொரு இறுதி வருட மாணவன் இ.கவிராஜன் (வயது22) இனந்தெரியாத நபர்களின் மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பாதுகாப்புத் தரப்பினர் உறுதிமொழி வழங்கிய பின்னரும் இப்படியான உயிர் அச்சுறுத்தல் சம்பவங்கள் தொடர்வதால் எவ்வாறு மாணவர்கள் தமது கல்வியைச் சுமுகமாகத் தொடரமுடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.இந்தத் தாக்குதலைக் கண்டித்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில்:
மாணவர் ஒன்றியத்தலைவர் யாழ். நகர்ப்பகுதியில் பட்டப்பகலில் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டதைக் கண்டித்து மாணவர்கள் வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தக் காலப்பகுதியிலேயே இ.கவிராஜனும் தாக்கப்பட்டுள்ளார்.
மாணவர்களது போராட்டம் தொடர்பில் யாழ். படைகளின் தளபதி, யாழ்.பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினர், பல்கலைக்கழக நிர்வாகத்தினரைச் சந்தித்துப் பேசியபோது, பல்கலைக்கழக மாணவர்களது கல்விச் செயற்பாடுகளைப் பாழாக்க அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியளித்திருந்தனர்.
நேற்று முன்தினம் சிவில் சமூகப்பிரதிநிதிகளுடனான சந்திப்பில் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பகிஷ்கரிப்பைக் கைவிடுவது தொடர்பில் மாணவர் ஒன்றியம் பரிசீலித்து வந்தது.இந்த நிலையிலேயே எமது மாணவன் கிளிநொச்சியில் வைத்துத் தாக்கப்பட்டுள்ளார்.எனவே இப்படியான உயிர் அச்சுறுத்தல் சம்பவங்கள் தொடரும் நிலையில் எவ்வாறு மாணவர்கள் தமது கல்வியைச் சுமுகமாகத் தொடர முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச நாடுகளை மனிதாபிமான அடிப்படையில் வேண்டிநிற்கின்றோம் என்றுள்ளது.


comment closed