பல்கலைக்கழக மாணவர்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தி மாணவர்களின் உரிமைப் போராட்டங்களை ஒடுக்கும் அராஜகச் செயலில் அரசு ஈடுபட ஆரம்பித்துள்ளது. அதன் வெளிப்பாடுகளே மாணவர்கள் மீதான தாக்குல்களும், மாணவரிடையேயான மோதல்களும் ஆகும்.
இவ்வாறு தெரிவிக்கிறார் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் சாந்த பண்டார.கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மற்றும் முகாமைத்துவக் கற்கைபீட மாணவரிடையே இடம் பெற்ற மோதல் சம்பவம் மற்றும் யாழ். பல்கலைக்கழக மாணவத் தலைவர், மாணவர் மீதான தாக்குதல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் உதயனுக்கு மேலும் கூறியவை வருமாறு யாழ். பல்கலைக் கழகத்தின் மாணவர் ஒருவர் நேற்று முன்தினம் இனந்தெரியாத குழுவினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அத்துடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவரும் இனந்தெரியாத குழுவினரால் கடுமையாகத் தாக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவக் கற்கைநெறி மாணவர்களுக்கும், கலைப்பீட மாணவர்களுக்கும் இடையில் நேற்றுமுன்தினமும் நேற்றும் மோதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மோதலானது ஓர் அரசியல் விடயமொன்றின் கலந்துரையாடலின் விளைவால் ஏற்பட்டதாகும்.இவற்றை ஒன்றுசேர்த்துப் பார்க்கும்போது உரிமைகளுக்காகப் போராடும் பல்கலைக்கழக மாணவர்களை அடக்கி ஆளும் அராஜக நடவடிக்கையை அரசு ஆரம்பித்திருக்கின்றமை ஊர்ஜிதமாகின்றது.
மாணவர்கள் மீது குண்டர்களை ஏவிவிட்டுத் தாக்குதல் மேற்கொள்வதன்மூலம் உரிமைப் போராட்டத்தை ஒடுக்கிவிடலாம் என்ற குறுகிய எதிர்பார்ப்புடன் அரசு உள்ளது. அரசின் எதிர்பார்ப்பு முட்டாள்தனமாகும்.இந்த எதிர்பார்ப்பை அடைந்து கொள்வதற்காக பல்கலைக்கழக மாணவர்களில் அரசுக்கு ஆதரவாக உள்ள சிலரை தன்வசம் ஈர்த்துக்கொண்டு அவர்கள் ஊடாக மாணவரிகளிடையேயுள்ள ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.இதன் வெளிப்பாடுகளே அண்மைக்காலமாகக் களனி, ஜயவர்தனபுர, கொழும்பு பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலாகும்.அரசின் இந்தச் சூழ்ச்சியை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் என்று கூறினார்.


comment closed