Home » செய்தி » இலங்கை அரசின் கடும் எதிர்ப்பையும் மீறி திட்டமிட்டபடி ஐ.நா. – கூட்டமைப்பு சந்திப்பு: நியூயோர்க்கில் நாளை

இலங்கை அரசின் கடும் எதிர்ப்பையும் மீறி திட்டமிட்டபடி ஐ.நா. – கூட்டமைப்பு சந்திப்பு: நியூயோர்க்கில் நாளை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீமூனுக்கும் இடையிலான சந்திப்பு திட்டமிட்டபடி நாளை முதலாம் திகதி நியூயோர்க்கில் இடம்பெறும் என்று அறிய வந்துள்ளது.

இலங்கை அரசு இந்தச் சந்திப்புக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தபோதும் திட்டமிட்ட சந்திப்பை இரத்துச் செய்ய முடியாது என்று பான் கீமூன் இலங்கை அரச பிரதிநிதிகளிடம் திட்டவட்டமாகத் தெரி வித்திருக்கிறார். இதனை அடுத்து தற்போது கனடாவில் தங்கியுள்ள கூட் டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பான் கீமூனைச் சந்தித்துப் பேச்சு நடத்துவார் எனத் தெரிகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் ஐ.நா பொதுச்செயலர் பான் கீமூனைச் சந்திப்பதை தடுத்து நிறுத்த இலங்கை அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கோ அல்லது ஐ.நாவில் உள்ள இலங்கையின் தூதுவர் பாலித கொஹன்னவுக்கோ இந்தச் சந்திப்புத் தொடர்பாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பான் கீ மூன் சந்திப்பதற்கு ஐ.நாவுக்கான இலங்கைத் தூதுவர் பாலித கொஹன்ன எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.  இந்தச் சந்திப்பை ஐ.நா பொதுச்செயலாளர் கைவிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். அதேவேளை கடந்த வாரம் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனைச் சந்தித்த இலங்கை ஜனாதிபதியின் சிறப்புத் தூதுவர் அமைச்சர் மகிந்த சமரசிங்க, இது தொடர்பான நிலைப்பாட்டை முன்கூட்டியே தெளிவுபடுத்தியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஒரே பிரதிநிதிகள் அல்லர் என்றும் ஏனைய தமிழ்க் கட்சிகளும் அங்கிருப்பதாகவும் அவர் பான் கீமூனுக்கு எடுத்துக் கூறி இதன் காரணமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பான் கீமூன் சந்திக்கக் கூடாது எனவும் வலியுறுத்தி இருந்தார்.
இந்த நிலையிலேயே இலங்கை அரசின் கடுமையான அழுத்தங்களை பான் கீமூன் நிராகரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்திக்க உள்ளார்.இதேவேளை, நியூயோர்க்கில் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவிப்பிள்ளை (நவநீதம்பிள்ளை) உட்பட ஐ.நா. உயரதிகாரிகள் பலரையும் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் சந்தித்துத் தமிழ்மக்களின் தற்போதைய நிலை தொடர்பில் விரிவாக விளக்குவர் எனத் தெரிகிறது.

comment closed