Home » ஆய்வு, முக்கிய செய்திகள் » கோத்தபாயாவின் காட்டுமிராண்டித்தனம் கடல் கடந்து செல்கிறது -அனலை நிதிஸ் ச. குமாரன்

கோத்தபாயாவின் காட்டுமிராண்டித்தனம் கடல் கடந்து செல்கிறது -அனலை நிதிஸ் ச. குமாரன்

இந்தியத் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளிக்கையில் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளரும், ஜனாதிபதியின் இளைய சகோதரருமான கோத்தபாய ராஜபக்ச அவர்கள் தமிழக அரசையும், அரசியல்வாதிகளையும் தாக்கிப் பேசினார். இதன் மூலம் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரின் சகோதரர்களின் சண்டித்தனம் கடல் கடந்து சென்றுவிட்டது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

விடுதலைப் புலிகளுடனான மோதல்களின் இறுதிக் கட்டங்களில் பல்லாயிரக்கணக்கில் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுவது குறித்து சர்வதேச நீதிமன்ற விசாரணை தேவை என்ற கோரிக்கை நியாயமற்றது என்றும் கோத்தபாய தெரிவித்தார். “விசாரணை வேண்டும் எனக்கோரும் அமெரிக்காவோ, பிரிட்டனோ மட்டும் உலகமாகிவிடாது.  ரஷ்யா, சீனா,பாகிஸ்தான்,பல ஆபிரிக்க நாடுகள், தென் கிழக்காசிய நாடுகள் தங்கள் நிலைப்பாட்டை ஆதரிக்கின்றன. இந்தியாவும் ஆதரிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே விசாரணை என்கிற பேச்சுக்கே இடமில்லை” என்றும் அப்பேட்டியில் கோத்தபாய தெரிவித்தார்.

“சர்வதேச விசாரணை வேண்டும் என வற்புறுத்தும் அண்மைய தமிழக சட்டமன்றத் தீர்மானம் சிறிலங்காவில் நிலவும் யதார்த்தங்களை உணராமல் நிறைவேற்றப்பட்டதாகும். இதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறார். உண்மையிலேயே சிறிலங்காவில் வாழும் தமிழர்கள் மீது அவருக்கு அக்கறை இருக்குமானால் தமிழக மீனவர்கள் நாட்டு எல்லை தாண்டி எமது பகுதிக்கு வந்து மீன் பிடிப்பதைத் தடுக்க வேண்டும்” என்று கோத்தபாய இந்தியாவின் ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.

கருணாநிதியையும் விட்டுவைக்கவில்லை கோத்தபாய ஈழப்போரின் நான்காம் கட்டத்தின் இறுதிக்காலத்தில் ஏற்பட்ட அழிவுகளுக்கு இந்தியாவின் நடுவன் அரசிற்கு முழுப் பொறுப்பும் உண்டு என்கிற வாதம் உலகத்தமிழர்களிடையே இருந்துவருகிறது. இந்திய நடுவன் அரசிற்கு ஆதரவளித்த கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.கா.வுக்கும் பங்குண்டு என்கிற வாதம் உலகத்தமிழரிடத்தில் பரவலாக இருந்து வருகிறது.

சிறிலங்கா அரசிற்கு மறைமுகமாக ஆதரவளித்த இந்திய நடுவன் அரசுடன் இணைந்திருந்த கலைஞரையும் கோத்தபாய விட்டுவைக்கவில்லை. வெறும் அரசியல் தேவைகளுக்காகவேதான் சிறிலங்காவின் தமிழர் பிரச்சினையை தமிழக அரசியல் கட்சிகள் முன்வைக்கின்றன என்று கூறினார் கோத்தபாய. அத்துடன், சிறிலங்காவின் உள்விவகாரங்களில் தலையிட தமிழகத் தலைவர்களுக்கோ அல்லது ஏனைய பிற நாடுகளின் தலைவர்களுக்கோ உரிமை இல்லையென்றும் கூறினார் கோத்தபாய. இக்கூற்றுக்கள் அனைத்தும் தமிழக தலைவர்களினாலும், தமிழக அரசினாலும் வன்மையாக கண்டிக்கப்பட்டுள்ளது.

கட்சி வேற்றுமையின்றி இந்திய நாடாளுமன்றத்திலும், தமிழக சட்டமன்றத்திலும் கோதபாயாவுக்கும், சிறிலங்கா அரசிற்கும் எதிராக குரல் எழுப்பப்பட்டுள்ளது.  அத்துடன், இந்திய நடுவன் அரசு தலையிட்டு சிறிலங்காவின் அராஜகப் போக்கிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டுள்ளது.  தமிழகம் இந்தியாவிற்குள்ளேதான் இருக்குமேயானால் இந்திய நடுவன் அரசு சிறப்புத் தூதுவர் ஒருவரை நியமித்து சிறிலங்காவிற்கு அனுப்பி தமிழ்நாட்டின் உணர்வினை தெரியப்படுத்த வேண்டுமென்கிற கருத்து வலுப்பெற்றுள்ளது.

போராட்டத்தின் மூலமாக உரிமையைப் பெற விரும்பும் மக்கள், அவர்களின் அரசியல் உரிமையை நிராகரிப்போரின் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது என கருணாநிதி தெரிவித்தார். சிறிலங்காவில் தமிழர் இன அழிப்பை தி.மு.க. ஆதரிக்கவில்லை எனக் கூறிய கருணாநிதி, தி.மு.க. அரசியல் இலாபத்திற்காகத்தான் சிறிலங்காவின் தமிழர் விடயத்தை எடுத்துக்கொண்டுள்ளது என கோத்தபாய கருதினால் அது முற்றிலும் தவறானது. தி.மு.க. நீண்டகாலமாக அதற்காக போராடுகிறது. தி.மு.க. சிறிலங்காத் தமிழரின் விடுதலையை விரும்புகிறது என்பதை அவர் நன்றாக அறிவார்.” எனக் கருணாநிதி கூறினார்.

அரசன் அன்றறுப்பான், தெய்வம் நின்றறுக்கும் என்கிற பொருள் கருணாநிதி விடயத்திலும் உண்மையாகிவிட்டது. கண்துடைப்பு நாடகங்களை அரங்கேற்றி 40,000 ஈழத்தமிழர்கள் அழிவதை தனது ஆட்சிக்காலத்திலையிலேயே கண்டுகளித்தார் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. ஈழத்தமிழர் விடயத்தில் தமிழகத் தலைவர்கள் கட்சி வேறுபாடுகளை கடந்து ஓரணியில் திரண்டு போராட்டங்களை நடத்தியிருந்தால் தமிழீழ தனியரசை சில நாட்களிலேயே இந்திய நடுவன் அரசினால் பெற்றுக்கொடுத்திருக்க முடியும். தமிழகத் தலைவர்களின் கருத்தொற்றுமை இல்லாமையினால்தான் ஈழத்தமிழர்கள் இன்று நடுத்தெருவில் விடப்பட்டுள்ளார்கள். கோத்தபாயாவின் அடாவடித்தனத்திற்கு பின்னராவது தமிழகத் தலைவர்கள் ஒன்றிணைந்து ஈழத்தமிழர் விடயத்தில் நடவடிக்கைகளை எடுப்பார்களா என்பது ஐயமே.

ஏழு கோடித் தமிழர்களின் பலம் என்ன என்பதைக் காட்டும் நேரமிது தமிழக அரசிற்கே சவால் விட்டுள்ளது மட்டுமல்லாது, தமிழகத்தின் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கே சவால் விட்டுள்ளார் கோத்தபாய. சவால் விடுபவர்களை வேட்டையாட துடிதுடிப்பாக இயங்கும் வல்லமையுடையவர்தான் ஜெயலலிதா.  அப்படிப்பட்ட ஒரு தலைவருடன் நேரடியாகவே தனது சண்டித்தனத்தை காட்டியுள்ள கோத்தபாயாவை எப்படி ஜெயலலிதா கையாள்வார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கோத்தபாய அவர்களினால் தெரிவிக்கப்பட்ட கூற்றுக்களுக்கெதிராக சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதில் அளிக்கும் போது ஜெயலலிதா கூறியதாவது:  “கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை உள்நாட்டுப் யுத்தத்தின் போது, மனிதாபிமானமற்ற முறையில் ஈவு இரக்கமின்றி அங்குள்ள தமிழர்கள் மீது இராணுவத் தாக்குதல் நடத்தி அதன் விளைவாக பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இறந்ததை நீங்கள் எல்லாம் அறிவீர்கள். எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன், இனப்படுகொலையை நடத்தியவர்களை யுத்த குற்றவாளிகள் என அறிவிக்க இந்திய அரசு, ஐக்கிய நாடுகள் சபையை வற்புறுத்த வேண்டும் என்றும், அது மட்டுமல்லாமல், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு மற்றும் முழு சம உரிமை கிடைக்கும் வரை அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 8.6.2011 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.”

“தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அதனை விமர்சித்து இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய பேட்டியில் கருத்து தெரிவிப்பது இலங்கை அரசு தான் செய்த தவற்றை நியாயப்படுத்துவது போல் அமைந்துள்ளது. இந்தத் தீர்மானத்தை நான் அரசியல் ஆதாயத்திற்காக கொண்டு வந்து நிறைவேற்றியதாக கோத்தபாய கூறியிருக்கிறார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.”

“ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால் அமைக்கப்பட்ட மூன்று நபர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே ஒழிய அரசியல் ஆதாயத்திற்காக இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்பதை முதலில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சிங்களவர், தமிழர் அல்லது இஸ்லாமியர் என்ற எந்தவித பாகுபாடுமின்றி அனைவரும் இலங்கையர் என்ற முறையில் தான் நடத்தப்படுகின்றனர் என்றும் மற்றவர்களை விட தங்கள் நாட்டு குடிமக்கள் மீது தாங்கள் மிகுந்த அக்கறை கொண்டு இருப்பதாகவும் பேட்டி அளித்திருக்கிறார் கோத்தபாய. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் ஆகும்.”

“இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான யுத்தத்தின் உச்சகட்ட பகுதியான 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2009-ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான காலத்தையும் அப்போது பல்வேறு திசைகளில் இருந்து வந்த துப்பாக்கிச் சூட்டில் சிக்கிக் கொண்ட பெரும்பாலான அப்பாவி தமிழர்களின் நிலைமையையும் ஆழ்ந்த கவனத்தில் எடுத்துக் கொண்டு ஆய்வு செய்த ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழு, இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட, குண்டு மழைக்கு விலக்களிக்கப்பட்ட பகுதியின் மீது இலங்கை இராணுவம் குண்டு மழை பொழிந்தது,மருத்துவமனைகள் மீது குண்டுமழை பொழிந்தது, மனிதாபிமானமற்ற முறையில் செய்ய வேண்டிய உதவிகளை செய்ய மறுத்தது, இலங்கை அரசை விமர்சிப்பவர்கள் மற்றும் ஊடகங்கள் உட்பட யுத்தப் பகுதி வெளியே இருப்பவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது> என பல மனிதாபிமானமற்ற பன்னாட்டு போர் நெறிமுறைகளை மீறிய செயல்களை இலங்கை இராணுவம் நிகழ்த்தியுள்ளதாக கண்டறிந்துள்ளது.”

“இது மட்டுமல்லாமல், மிகப் பெரிய ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என்று இலங்கை அரசு அறிவித்த பின்னரும் அப்பாவி இலங்கைத் தமிழர்கள் தங்கியிருந்த பகுதிகளில் குண்டுகளை வீசி பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இறப்பதற்கு காரணமாக இலங்கை இராணுவம் இருந்தது என்றும் இந்த வல்லுநர் குழு சுட்டிக் காட்டியுள்ளது. மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பொருட்கள் மக்களை சென்றடையா வண்ணம் இலங்கை அரசு தடையை உருவாக்கியதாகவும்  ஐ.நா. வல்லுநர் குழு அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஊடகங்களால் வெளியிடப்பட்ட கோரமான வீடியோ காட்சிகளிலிருந்து, பெரும்பாலானோர் கொடிய முறையில் கொல்லப்பட்டிருப்பதும் தெளிவாகிறது,’ என ஜெயலலிதா தனது உரையில் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், ‘வட இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதுதான் தற்போதைய முக்கிய பணி என்றும், யுத்தக்குற்றவாளிகள் என்று தற்போது கூறுவது பயனற்றது என்றும் கோதபாய பேட்டி அளித்து இருந்தார். இலங்கையில் நிலவும் உண்மை நிலைவரம் என்னவென்றால், யுத்தம் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், இலங்கைத் தமிழர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணவோ, பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்தோ எந்தவிதமான நடவடிக்கையும் இலங்கை அரசால் எடுக்கப்படவில்லை என்பதுதான். இவருடைய இந்தப் பேட்டியிலிருந்தே இலங்கை இராணுவம் யுத்த குற்றம் புரிந்து இருக்கிறது! இலங்கை அரசு யுத்த குற்றம் புரிந்திருக்கிறது என்று மறைமுகமாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.’

‘உண்மையிலேயே இலங்கை இராணுவம் யுத்தக்குற்றம் செய்யவில்லையென்றால், இது தொடர்பான சர்வதேச விசாரணைக்கு தயார் என இலங்கை அரசு அறிவித்து இருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யாமல் தேவையற்ற பேட்டிகளை அளித்து வருவது செய்த தவறை மூடி மறைக்கும் பணியில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறதோ என்ற சந்தேகத்தை சர்வதேச நாடுகள் மத்தியில் தற்போது ஏற்படுத்தியுள்ளது. கோத்தபாய, நான் கொண்டு வந்த தீர்மானத்தை விமர்சிக்கிறார் என்றால், அந்த அளவுக்கு இந்தத் தீர்மானத்தின் தாக்கம் இருந்திருக்கிறது என்பதை சட்டமன்ற உறுப்பினர்களாகிய நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.’

மேலும் அவர் தெரிவிக்கையில், ‘இலங்கைத் தமிழ் சகோதர, சகோதரிகளின் நெஞ்சை பிளக்கும் துயரங்களை அறிந்த சர்வதேச நாடுகள் யுத்தக்குற்றத்திற்கு இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருதுகின்ற சூழ்நிலையில், யுத்த குற்றங்கள் நிகழ்த்தியவர்களை யுத்தக்குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும், தற்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி சிங்களவர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில், அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இந்திய அரசை கேட்டுக் கொள்ளும் தீர்மானம் அரசியல் ஆதாயத்திற்கு அப்பாற்பட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’

‘இந்தச் சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீது மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததுதான், இது போன்றதொரு பேட்டியை அளிப்பதற்கான துணிச்சலை கோத்தபாயாவுக்கு அளித்திருக்கிறது என்ற ஐயம் நடுநிலையாளர்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் வரை, இலங்கைத் தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்படும் வரை, சிங்களவர்களுக்கு இணையான அந்தஸ்து அவர்களுக்கு கிடைக்கும் வரை எனது தலைமையிலான அரசு ஓயாது என்பதையும், தமிழர்களின் இந்த நியாயமான உரிமைகளை வென்றெடுக்க தேவையான இராஜதந்திர நடவடிக்கைகளை எனது அரசு எடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்வதுடன், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு உள்நோக்கம் கற்பிக்கும் வகையில் பேட்டி அளித்துள்ள கோத்தபாயாவுக்கு இந்தியத் தூதர் மூலம் தனது கண்டனத்தை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்,’ எனத் தெரிவித்து தனது உரையை நிறைவு செய்தார் ஜெயலலிதா.

மகிந்த ராஜபக்ச மற்றும் அவரின் சகோதரர்களின் அடாவடித்தனம் அத்துமீறிப் போய்க்கொண்டிருக்கிறது என்பதையையே கோத்தபாயாவின் பேட்டியிலிருந்து உணர முடிகிறது. இரண்டு கோடி மக்களைக் கொண்ட சிறிலங்கா என்கிற நாட்டின் அதிகாரிகள், ஏழு கோடி மக்களைக் கொண்ட மாநிலத்திற்கே சவால் விடுகிறார்கள் என்பதை வைத்துப்பார்க்கும் போது சிறிலங்காவின் ஆட்சியாளர்களின் ஆட்டம் நீண்ட நாட்கள் நீடிக்கப்போவதில்லை என்பதையையே காட்டுகிறது. எது எப்படி இருந்தாலும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் எவ்வாறு கோத்தபாயாவின் சவாலை கையாளப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

comment closed