Home » விளையாட்டு » இதுவரை 2வது இடம் வகித்த நெதர்லாந்து அணி முதல் முறையாக முதலிடத்திற்கு

இதுவரை 2வது இடம் வகித்த நெதர்லாந்து அணி முதல் முறையாக முதலிடத்திற்கு

சர்வதேச உதைபந்து சம்மேளனம் உதைபந்து அணிகளின் தரவரிசைப் பட்டியல் ஒன்றினை அண்மையில் வெளியிட்டுள்ளது. இதுவரை 2வது இடம் வகித்த நெதர்லாந்து அணி முதல் முறையாக முதலிடத்திற்கு முன்னேறியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் நெதர்லாந்து அணி எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் ஆடவில்லை. இங்கிலாந்துக்கு எதிராக விளையாட இருந்த நட்புறவு ஆட்டம், லண்டனில் நடந்த கலவரம் காரணமாக கைவிடப்பட்டது.

ஆனால் கடந்த ஒரு வருட காலமாக முதலிடத்தில் இருந்த உலக சம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணி சமீபத்தில் இத்தாலிக்கு எதிரான நட்புறவு ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் தோற்றது. இதனால் ஸ்பெயின் அணி 2வது இடத்திற்கு தள்ளப்பட்டதன் காரணமாக நெதர்லாந்து அணி தானாகவே முதலிடத்திற்க்கு முன்னேறியமை குறிப்பிடத்தக்கது.

1993 ஆம் ஆண்டு உதைபந்து தரவரிசை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு முதல் இடத்தை பிடித்த 7வது அணி நெதர்லாந்து ஆகும். ஏற்கனவே ஆர்ஜென்டினா, பிரேசில், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய அணிகள் முதலிடத்தை அலங்கரித்துள்ளன.

முன்னாள் உலக சம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணி நட்புறவு ஆட்டத்தில் ஜேர்மனியிடம் 2-3 என்ற கணக்கில் தோல்வி கண்டது. இதன் விளைவாக அந்த அணி தரவரிசையில் 2வது இடத்தை இழந்து 6 வது இடத்திற்கு இறங்கியுள்ளது. இந்திய அணி 158வது இடம் வகிக்கிறது.

தரவரிசையில் முதல் 10 இடங்களை வகிக்கும் அணிகளாக 1.நெதர்லாந்து 2.ஸ்பெயின் 3.ஜேர்மனி 4.இங்கிலாந்து 5.உருகுவே 6.பிரேசில் 7.இத்தாலி  8.போர்த்துக்கல் 9.ஆர்ஜென்டினா 10.குரோஷியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

comment closed