Home » ஆய்வு, சிறப்புச் செய்திகள், செய்தி » “ஜி.எஸ்.பி.+ சலுகை வாபஸ் பெறப்பட்டதால் ஆடைத் தொழிற்சாலைகள் சில மூடப்படும் அபாயம்”

“ஜி.எஸ்.பி.+ சலுகை வாபஸ் பெறப்பட்டதால் ஆடைத் தொழிற்சாலைகள் சில மூடப்படும் அபாயம்”

ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் வாபஸ் பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் இலங்கையின் ஏற்றுமதியாளர்களுக்கு நெருக்கடியான தருணத்தை எதிர்கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் ஆடைத்துறையானது நீண்டகாலமாக நன்மதிப்பைப் பெற்றுக்கொண்டதாக இருந்து வந்தது. ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகையின் பிரகாரம் சீனா மற்றும் ஏனைய நாடுகளுக்கு அதிகளவு சலுகை முன்னுரிமை கிடைத்திருக்கவில்லை. கடந்த வருடம் இச் சலுகையை மீளப் பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பிப்பதற்கான சந்தர்ப்பம் வந்தபோது ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள இலங்கை அரசு மறுத்துவிட்டது. உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டங்களின் போதான போர்க்குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியிருந்தது.

“நாங்கள் நெருக்கடிக்குள் சென்றுகொண்டிருக்கிறோம். சலுகைகள் முடிவுக்கு வருவதால் நிச்சயமற்ற தருணத்தை நாம் எதிர்பார்க்கின்றோம்%27 என்று தங்கொட்டுவ கோஸ்லேன் என்ற ஜப்பானியருக்குச் சொந்தமான நிறுவனத்தின் தலைவரான சுனில் விஜயசிங்க ஏ.எவ்.பி.செய்திச்சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கவலைகள் குறித்து தாங்கள் புரிந்துகொண்டிருப்பதாக வர்த்தகத்துறை நிறைவேற்று அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால், சமூக உரிமைகள் விவகாரங்கள் தொடர்பான உறுதிப்பாடுகளுக்காக இந்த வரிச்சலுகை இரத்துச் செய்யப்படுவது குறித்து அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மனித உரிமைகளை மேம்படுத்தவேண்டுமென்ற நோக்கத்திற்காக இந்த வரிச்சலுகைகைள் வாபஸ் பெறப்படுவதானது சிறப்பான நிலைமையை ஏற்படுத்தப் போவதில்லை. முற்றுமுழுதாக நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று விஜயசிங்க கூறியுள்ளார்.

வருடாந்தம் 1.5 பில்லியன் டொலர் பெறுமதியான சலுகைள் இலங்கைக்குக் கிடைத்து வந்தன. ஆனால், அரசாங்கம் 150 மில்லியன் டொலர்களே இழப்பு ஏற்படுமெனக் கூறியுள்ளது. சலுகைகள் இழப்பானது ஏற்கனவே இலங்கை ஏற்றுமதியாளர்களைப் பலவீனமாக்கியுள்ளது.

ஐரோப்பாவானது பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கிய நிலைமையில் ஏற்கனவே தங்கொட்டுவ கோஸ்லேன் நிறுவனமானது தனது கேள்வி மனுவில் 25 சதவீத வீழ்ச்சியைப் பெற்றுள்ளது. அத்துடன் வரிச் சலுகை இரத்து செய்யப்படுவதால் பாதிப்பு மேலும் அதிகமாகும் என்று விஜயசிங்க கூறியுள்ளார். மேலதிக வேலை நேரம் மானிய அடிப்படையிலான கடன்கள், இலவச உணவு, சப்பாத்து, சுற்றுலா, வருட முடிவில் இடம்பெறும் விருந்து உபசாரங்கள், இலவச பாடசாலை விநியோகங்கள் என்பனவற்றை கம்பனி அகற்றியிருப்பதாக அவர் கூறியுள்ளார். அடுத்தாக வேலைகளும் இழக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

கம்பனியானது வீழ்ச்சி கண்டால் மற்றொரு வேலையைப் பெற்றுக்கொள்ள முடியாதென தொழிற்சாலைப் பணியாளரான நீத்தா ரஜனி என்பவர் கூறியுள்ளார். ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை வாபஸ் பெறுவதானது இலங்கையின் ஆடைத் தொழிற்

றுறையை அனேகமாகப் பாதிக்கும் என்று கம்பனிகள் கூறுகின்றன. நாட்டின் பாரிய கைத்தொழிற்றுறையாக ஆடை ஏற்றுமதியே காணப்படுகிறது. இத்தொழிற்றுறையில் 10 இலட்சம் பேர் வரை பணியாற்றுகின்றனர். தலைநகர் கொழும்பைச் சூழ 250 க்கும் அதிகமான தொழிற்சாலைகள் உள்ளன.

எமது வருடாந்த சம்பாத்தியத்தில் நாங்கள் சுமார் 500 மில்லியன் டொலர்களை இழப்போம் என்று ரொஹான் மாசாகோரள கூறியுள்ளார். இவர் கூட்டு ஆடை சங்க சம்மேளனத்தின் செயலாளராகும். ஐரோப்பாவைச் சேர்ந்த கொள்வனவாளர்கள் மேலதிகமாக 10 சதவீத வரியைச் செலுத்தவேண்டியிருக்கும் அல்லது உள்ளூர் தயாரிப்பாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நிலைமை ஏற்படும். ஏனையோர்கள் எதிர் நாடுகளுடன் தமது வர்த்தகங்களை மாற்றிக்கொள்வார்கள் என்று அவர் மேலும் கூறியுள்ளார். சில தொழிற்சாலைகள் மூடப்படக்கூடும் என்று மாசாக் கோரள ஏ.எவ்.பி.க்குத் தெரிவித்தார். தற்போது 45 சதவீதமான ஆடைகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்படுகின்றன. ஜப்பான், அவுஸ்திரேலியா, பிரேஸில், ரஷ்யா ஆகிய நாடுகளுடன் புதிய வர்த்தக உடன்பாடுகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தைக் கூட்டு ஆடை சங்க சம்மேளனம் வலியுறுத்தி வருகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் சார்ந்திராத வகையில் வேறுபட்ட சந்தைகளைத் தாங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறோம். 5 சதவீத அதிகரிப்பு ஏனைய சந்தைகளில் கிடைத்தால் கூட அது உதவியாக இருக்குமென்று மசா கோரள கூறியுள்ளார். சிறியளவிலான ஆதாயமே கிடைப்பதனால் ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றிய வரிச்சலுகைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. கடந்த வருடம் ஆடைத் தயாரிப்பாளர்களின் செலவு 1012 சதவீதமாக அதிகரித்துள்ளதாக இலங்கையின் பெரிய ஆடைத் தயாரிப்பாளர் நிறுவனங்களின் ஒன்றான ஸ்டார் கார்மன்ஸின் தலைவரான ஏ.சுகுமாரன் கூறியுள்ளார். எங்களுக்கு ஏற்கனவே குறைந்தளவு ஆதாயமே கிடைக்கின்றது. இனிமேலும் எமது செலவீனத்தை எம்மால் குறைக்க முடியாத நிலைமை உள்ளது. ஏனெனில் அடிப்படைப் பொருளாதார நிலைமை எமக்கெதிராகக் காணப்படுகிறது என்று சுகுமாரன் கூறியுள்ளார்.

comment closed