Home » சிறப்புச் செய்திகள், செய்தி, முக்கிய செய்திகள் » பிரதான வீதிகளை அபிவிருத்தி செய்ய சீனக் கைதிகள்

பிரதான வீதிகளை அபிவிருத்தி செய்ய சீனக் கைதிகள்

யாழ்.மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழுள்ள நான்கு பிரதான வீதிகளை அகலமாக்கிப் புனரமைக்கும் பணிகளைச் சீன நிறுவனத்திடம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அடுத்த மாதம் கைச்சாத்திடப்பட்டு ஆரம்பமாகவுள்ள இப் பணிகளில் சீன நிறுவனத்தினால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள சீனக் கைதிகள் ஈடுபடுத்தப்படுவர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, யாழ்.மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழுள்ள யாழ்ப்பாணம்- காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்-பலாலி வீதி, யாழ்ப்பாணம்-கோப்பாய் சந்தி வரையான பருத்தித்துறை வீதி மற்றும் யாழ்ப்பாணம்-கண்டி வீதி ஆகிய நான்கு பிரதான வீதி அகலமாக்கப்பட்டு புனரமைப்புச் செய்யப்படவுள்ளன.

இதில் யாழ்ப்பாணம்-கண்டி ஏ-9 வீதி மத்தியிலிருந்து இரு மருங்கிலும் 25 மீற்றர் அகலமாக்கப்படவுள்ளது. இவ் வீதிகளின் புனரமைப்புக்கான பணிகளை அரசாங்கம் சீன நிறுவனத்திடம் வழங்கவுள்ளது. இப் பணிகளுக்கான சீன நிறுவனத்துடனான ஒப்பந்தம் அடுத்த மாதம் பிற்பகுதியில் கைச்சாத்திடப்பட்டு புனரமைப்பு வேலைகள் ஆரம்பமாகவுள்ளன. தற்போது தென்னிலங்கையில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வரும் மேற்படி சீன நிறுவனம் சீனச் சிறைக் கைதிகளை அழைத்து வந்து வேலைக்கு அமர்த்தியுள்ளது. இந் நிலையில் யாழ்.மாவட்டத்தில் சீன நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் வீதி அபிவிருத்திப் பணிகளிலும் சீனச் சிறைக் கைதிகள் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை இலங்கையில் வடக்கு மாகாணம் உட்பட பல பகுதிகளின் அபிவிருத்திப் பணிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சீனக் சிறைக் கைதிகள் ஈடுபடுத்தப்படவுள்ளனர் எனவும், இதனால் தமிழ் மக்களுக்குப் பெரும் ஆபத்து எனத் தமிழக முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க. தலைவருமான செல்வி ஜெயலலிதா கடந்த மே மாதம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

comment closed