Home » பொருண்மியம் » வடக்கு – கிழக்கு வாவிகளில் அருகி வரும் கண்டல் தாவரங்கள்

வடக்கு – கிழக்கு வாவிகளில் அருகி வரும் கண்டல் தாவரங்கள்

யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் வடக்கு – கிழக்கு வாவிகளில் காணப்படும் கண்டல் தாவரங்கள் அழிவடைந்து அருகி வருகின்றன. இதனைத் தடுக்க, கண்டல் தாவரங்களை (கண்டல் கன்றுகளை) நடுவதற்கான நடவடிக்கைகளை கடற்தொழில் அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் உள்ள வாவிகள் மற்றும் களப்புகளில் கண்டல் கன்றுகளை நடும் நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கடற்தொழில் அமைச்சின் பிரதிச் செயலாளர் டெம்ங்கோ ஜோர்ஜ் தெரிவித்தார்.

கண்டல் தாவரங்கள் நடும் நடவடிக்கைகள் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் நகரப்பகுதி, வாகரைப்பகுதி மற்றும் முகத்துவாரத்தில் இருந்து கிட்டங்கி வரை உள்ள பகுதிகளில் கண்டல் தாவரங்கள் நடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது திருகோணமலை, மூதூர், கிண்ணியா ஆகிய பகுதிகளில் மிகவும் சிறப்பாக இந்த கண்டல் தாவரங்கள் நடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

எதிர்காலத்தில் வடக்கிலும் கண்டல் தாவரங்கள் நடும் நடவடிக்கை செயற்படுத்தப்படவிருக்கிறது” என்றார்.

யுத்த காலங்களின் போது பாதுகாப்பு காரணங்களுக்காகவும் விறகு பாவனைக்காகவும் கண்டல் தாவரங்கள் அழிக்கப்பட்டன. கண்டல் தாவரமானது இயற்கை சமநிலையைப் பேணுவதில் பெரும் பங்காற்றி வருகின்றது.மேலும் இந்தத் தாவரங்களின் நிழல்களில் மீன்கள் இனப்பெருக்கம் செய்து வாழ்வதற்கு உகந்ததாக அமைகின்றது.

இதனால் மீனினங்கள் பெருகி அப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும் இவை பெருமளவில் உதவுகின்றன.

களப்பு பிரதேசங்களிலுள்ள கண்டல் தாவரங்கள், கடல் நீர், நன்னீருடன் கலக்காமலிருப்பதற்கு பெரும் பங்காற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்னீர் உவர் நீராகாமல் தடுப்பதோடு விவசாயிகளுக்கும் மறைமுகமாக உதவி வருகின்றது.

பொதுவாக இலங்கையில் ஐந்து வகையான கண்டல் தாவர இனங்கள் காணப்படுகின்றன. ‘றைசபோர்’ என அழைக்கப்படும் ஒரு வகை தாவர இனத்தைச் சேர்ந்த இரு வகைகளும் ‘சொனற்றோசியா’ என அழைக்கப்படும் தாவர இனத்தைச் சேர்ந்த மூன்று வகைகளும் உள்ளன.

இவை பெரும்பாலும் ஆறுகள், வாவிகள், கழிமுகங்கள் போன்றவற்றின் கரைகளில் வளர்கின்றன.அதனுடைய வேர்கள் மண்ணைப் பிடித்து வைத்திருப்பதனால் வாவிகள், ஆறுகளின் கரைகளை மண் அரிப்பிலிருந்து பாதுகாக்கின்றது.

மேலும் முருகைப் பாறைகள், கடற்படுகைகள் என்பன சேதம் அடையாமல் பாதுகாக்க இது பேருதவி புரிகின்றது.

அது மட்டுமல்லாமல் நீர்வாழ் உயிரினங்களின் இன விருத்திக்கும் அதன் தொடர்ச்சியான நிலைப்பேற்றுக்கும் அவசியமான சூழலை இந்த கண்டல் தாவரங்கள் ஏற்படுத்திக் கொடுக்கின்றன.

சூழலை மாசுபடுத்தும் காரணிகளைத் தனக்குள் உறிஞ்சி வைத்துக் கொள்வதிலும் இந்த கண்டல் தாவரங்கள் உதவுகின்றன.

உலக நிலப்பரப்பில் ஒரு வீதத்தைக் கண்டல் தாவரம் கொண்டிருப்பதாகவும் அது இயற்கை சமனிலையைப் பாதுகாக்க பெரிதும் உதவுவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

யுத்தத்தால் சிதைவடைந்த எமது நாட்டின் வடக்கு-கிழக்குக் கரையோரங்களை அண்டிய பகுதிகளின் வளத்தைப் பேணி, வனப்புமிக்கதாகவும் அழகிய நம் தேசத்துக்கு எழில் சேர்க்கவும் இந்த கண்டல் தாவரங்கள் பெரும் பங்காற்றும் என்பதில் ஐயமில்லை.

comment closed